தொட்டி வைப்பதே தீர்வு
மலுமிச்சம்பட்டி, மதுரை வீரன் கோவில் வீதியில், குப்பை கொட்டக்கூடாது என்ற அறிவிப்பையும் மீறி, அருகில் உள்ள வீடுகளில் உள்ளோர், திறந்தவெளியில் குப்பையை கொட்டுகின்றனர். கழிவுநீர் வடிகாலில், குப்பையால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தொட்டி வைத்து குப்பையை சீராக அகற்ற வேண்டும்.
- மகேந்திரன், மலுமிச்சம்பட்டி.
அடிக்கடி உடையும் குழாய்
குனியமுத்துார், ரங்கசாமி நாயுடு நகரில், குடிநீர் குழாய் உடைந்து, இரண்டு மாதங்கள் ஆகியும், சரிசெய்யப்படவில்லை. வீணாகும் குடிநீர் சாலையில், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பிற்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும்.
- அஸ்வின், குனியமுத்துார்.
ஆக்கிரமிப்பால் நெருக்கடி
ஆர்.எஸ்.புரம், மேற்கு சம்பந்தம் சாலை, பாரத் வங்கி அருகில், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து பல கடைகள் செயல்படுகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- மகேஸ்வரி, ஆர்.எஸ்.புரம்.
கட்டடகழிவை அகற்றணும்
மதுக்கரை நகராட்சி, 13வது வார்டில், தண்டபாணி தோட்டம் பகுதியில் சாலையில், கட்டட கழிவுகள் பல வாரங்களாக குவிந்துள்ளது. இதனால், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல மிகவும் இடையூறு ஏற்படுகிறது.
- ஷோபன், மதுக்கரை.
தொற்று நோய்க்கு வாய்ப்பு
ரத்தினபுரி, சாதிக்பாட்சா வீதியில், சில வீடுகளிலிருந்து நேரிடையாக மனித கழிவுகளை, சாக்கடையில் கலக்கவிடுகின்றனர். இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டேவிட், ரத்தினபுரி.
தார் சாலைக்காக மக்கள் தவிப்பு
பி.என்.புதுார், ஐஸ்வர்யா நகரில்,தார் சாலை அமைக்க கோரிபலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. சமீபத்தில் பெய்த மழையில், மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. மக்கள் நடக்கவும், வாகனங்கள் செல்லவும் சிரமமாக உள்ளது.
- லட்சுமி, பி.என்.புதுார்.
சிக்கலை குறைக்க 'சிக்னல்'
சத்தி ரோடு, கணபதிமாநகர் பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், கணபதிமாநகர் மற்றும் காந்திமாநகர் சந்திப்பில், அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இப்பகுதியில், சிக்னல் அமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சேகர், காந்திமாநகர்.
துர்நாற்றம் தாங்கல
கெம்பட்டி காலனி, 80வது வார்டு, கனி மெடிக்கல்ஸ் அருகில், சாக்கடையை சுத்தம் செய்து, மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- பாலகிருஷ்ணன், கெம்பட்டி காலனி.
சாலையில் ஓடும் சாக்கடை
இருகூர் பேரூராட்சி, காமாட்சிபுரம், ஐந்தாம் வார்டில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாருவதில்லை. ஆங்காங்கே, கழிவுநீர் தேங்கி, சாலையில் வழிந்தோடுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- அஜீதா, காமாட்சிபுரம்.
தட்டுப்பாடு நிச்சயம்
மசக்காளிபாளையம் சாலையில், குடிநீர் குழாய் உடைந்து அதிகளவு தண்ணீர் வீணாகிறது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- விக்னேஷ், மசக்காளிபாளையம்.
கண்டிப்பு தேவை
இடையர்வீதி, செல்லப்பிள்ளை சந்திப்பில், பிளாஸ்டிக் குப்பை, உணவு கழிவுகள் மற்றும் மதுபாட்டில்கள் கிடக்கிறது. குப்பையை அகற்றுவதுடன், இங்கு கழிவுகளை வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வராஜ், இடையர்வீதி.
கழிவுநீர் தேக்கம்
மதுக்கரை ரோடு, எம்.ஜி.ஆர்., நகர், மூன்றாவது வீதி, வடக்கு பகுதியில், சாக்கடை சுத்தம் செய்யாமல், கழிவுநீர் அடைத்து நிற்கிறது. வாரம் ஒருமுறை சாக்கடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லோகநாதன், மதுக்கரை.
பழுதடையும் உபகரணங்கள்
ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டுஉபகரணங்களில், கல்லுாரி மாணவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் ஏறி மூர்க்கத்தனமாக விளையாடுகின்றனர். இதனால், உபகரணங்கள் உடைந்து, பழுதடைகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும்.
- மருதாசலம்,
ரேஸ்கோர்ஸ்.
மூச்சை முட்டும் புகை
செல்வபுரம் பைபாஸ் சாலையில், யோகா சாஸ்தா குடியிருப்பு பகுதிக்கு பின்புறம், பழைய டயர்கள் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளது. இங்கு, டயரை எரிப்பதால், கடும் புகை வெளிவருகிறது. அருகில் வசிப்போர், கண்ணெரிச்சல், மூச்சு திணறல் போன்றவற்றால் பாதிப்படைகின்றனர்.
- வேலவன்,
செல்வபுரம்.