தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாநகராட்சியின் ஓராண்டு சாதனை புத்தகத்தில், தி.மு.க., மேயர் சுய விளம்பரம் செய்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளதாக குற்றம் சாட்டி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று மேயர் ராமநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமிஷனர் சரவணக்குமார் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த 41வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன் பேசுகையில், ''மாநகராட்சியின் ஓராண்டு சாதனை புத்தகத்தில், செய்தி தாள்களில் வெளியான செய்தியை புத்தகமாக அச்சிட்டு, மக்கள் வரி பணத்தை வீணடித்துள்ளனர்,'' என்றார்.
தி.மு.க., கவுன்சிலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
அப்போது, மேயர் ராமநாதன், அ.தி.மு.க., கவுன்சிலர்களை பார்த்து, ''நீங்கள் ஓ.பி.எஸ்., அணியா, இ.பி.எஸ்., அணியா?' எனக் கேட்டு கிண்டல் அடித்தார்.
இதையடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாநகராட்சியில், 'உங்களின் ஒருவன்' என ஓராண்டு சாதனை என்ற புத்தகம், 55 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஓராண்டில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும் எதுவும் இடம் பெறவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளை, தி.மு.க.,வில் செய்ததாக மேயர் கூறி வருகிறார்.
மேலும், சுய விளம்பரமாக மட்டுமே புத்தகத்தை அச்சடித்து வினியோகம் செய்து, மாநகராட்சியின் வரிப்பணத்தை வீணடித்துள்ளார்.
இது குறித்து கேட்டால், 'என்னை கேள்வி கேட்க உங்களுக்கு அதிகாரம் இல்லை' என்கிறார். புத்தகம் அச்சடிக்க மாநகராட்சி ஆணையம் ஒப்புதல் கொடுத்து இருந்தால், இது தொடர்பாக, வழக்கு தொடர உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.