கோவை:கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், கோவையில் நேற்று அடையாள வேலை நிறுத்தம் செய்ததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல்; ஊதிய முரண்பாட்டை களைதல்; காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், அரசு அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி, வெறிச்சோடி காணப்பட்டன.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த வேலுமணி, துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கோரிக்கையை விளக்கி பேசினார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ராமசாமி, கிராம செவிலியர் சாந்தி, வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சையத் உசேன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் அரங்கநாதன் உள்ளிட்டோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.