அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை:
'நீட்'டுக்கு எதிராக எல்லா தலைவர்களையும், தி.மு.க.,வினர் ஒன்று சேர்க்கவில்லை. அதேபோல் தான், ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கும் ஒன்று சேர மாட்டார்கள். ஆனால், பிரதமர் வேட்பாளராக மட்டும் ராகுலை தி.மு.க.,வினர் முன்மொழிவர். 'மிசா' என்கிற எமர்ஜென்சியை எதிர்த்த, தி.மு.க.,வின் காகிதப் புலிகள் பேச்சோடு நின்று போய் விட்டனர் என்பதற்கு, இதை விட வேறு உதாரணம் வேண்டுமா?
'நீட்' தேர்வு, 2017ல் தான் முதல் முறையாக, அதுவும் தமிழகத்துல அ.தி.மு.க., ஆட்சி இருந்தப்ப தானே அமலுக்கு வந்தது... அப்பவே, அதற்கு எதிரா இவங்க உருப்படியா எந்த நடவடிக்கையும் எடுக்கலையே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
விசாரணை என்ற பெயரில், திருநெல்வேலி மாவட்ட காவல் துறை அதிகாரி, பல்வீர் சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டுமே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவர். இதுபோன்றவர்கள், காவல் துறை உயர் பதவிகளில் இருந்தால், மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. எனவே, அவரை கைது செய்வதுடன், பணிநீக்கமும் செய்ய வேண்டும்.
வாஸ்தவம் தான்... இந்த மாதிரி அதிகாரிகளை கைது பண்ணி, பணிநீக்கம் செய்வது ஒன்றே, கடும் தண்டனையாக இருக்க முடியும்!
![]()
|
தமிழக பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள், தி.மு.க., நிர்வாகிகள் பிடியில் உள்ளன. குறைந்த விலைக்கு நெல்லை தர மறுக்கும் விவசாயிகள் கடுமையாக மிரட்டப்படுகின்றனர். சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி, நெல் கொள்முதல் நிலையங்களை மூடி விடுகின்றனர். விவசாயிகள் வேறு வழியில்லாமல் குறைந்த விலைக்கு விற்கின்றனர். இது தொடருமானால், விவசாயிகள் சாலையில் இறங்கி போராட தயாராக உள்ளனர்.
இவரது தலைமையிலயே, பா.ஜ., சார்பில், விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தி அரசை பணிய வைக்கலாமே!
தமிழக காங்., துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன்அறிக்கை:
'தமிழகத்தில் அனைத்து கடைகளிலும், ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்; இல்லை என்றால், கருப்பு மையோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன் வாயிலாக, கருப்பு மையின் ஏஜன்சியை ராமதாஸ் எடுத்திருப்பாரோ என்ற சந்தேககம் வருகிறது. மருத்துவராக இருக்கும் அவர், எப்போது பெயின்டராக மாற போகிறார் என்பது, ராமதாசுக்கே வெளிச்சம்.
எல்லா காங்கிரசாரும், ராகுல் தகுதி நீக்கத்துக்கு எதிரா போர்க்கோலம் பூண்டிருக்காங்க... இவர் சம்பந்தம் இல்லாம, ராமதாஸ் மேல பாய்வது ஏன்னு புரியலையே?