பிரயாக்ராஜ், ஆள் கடத்தல் தொடர்பான வழக்கில் பிரபல தாதாவும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.,யுமான அதிக் அகமது உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.பி.,யாக இருந்தவர் அதிக் அகமது. இவர், உ.பி.,யில் பிரபலமான தாதாவாகவும் வலம் வந்தார்.
கடந்த, 2005ல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., வாக இருந்த ராஜு பால் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதிக் அகமது கைது செய்யப்பட்டார்.
![]()
|
இந்த வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்பவரை, சிறையில் இருந்தபடியே ஆளை வைத்து கடத்தியதாக, அதிக் அகமது மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, பிரயாக்ராஜில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த பிப்ரவரியில் போலீஸ் காவலில் இருந்தபோதே உமேஷ் பால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்புஅளிக்கப்பட்டது.
இதில் அதிக் அகமது, அவரது கும்பலைச் சேர்ந்த சவுலத் ஹனீப், தினேஷ் பஷி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ௧ லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி தினேஷ் சந்திர சுக்லா தீர்ப்பளித்தார்.