உடுமலை:உடுமலை அருகே விளை நிலத்தில் வரலாற்று ஆய்வாளர்களின் மேற்பரப்பு ஆய்வில், பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி உட்பட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சோமவாரப்பட்டியில், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மேற்பரப்பு ஆய்வில் ஈடுபட்டனர். அங்குள்ள விளைநிலங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, பெருங்கற்காலத்தை சேர்ந்த, சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழி சிதிலங்கள், பச்சை மணி உள்ளிட்ட அணிகலன்கள் மற்றும் கற்திட்டைகளை கண்டறிந்தனர்.
ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
சோமவாரப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சின்னங்கள் அதிகளவு உள்ளன. குறிப்பாக, பெருங்கற்கால பண்பாட்டில் இறந்தவர்களுக்கு நினைவு சின்னமாக, கற்திட்டைகள் அமைத்துள்ளனர்.
இத்தகைய கற்திட்டைகள், முதுமக்கள்தாழி உள்ளிட்டவை இப்பகுதியிலுள்ள விளைநிலங்களில் பரவலாக கிடைக்கிறது. கடந்த, 2014ல் இப்பகுதியிலுள்ள மூவர், கண்டியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் பொருட்களை கண்டறிந்தனர். இதன் அடிப்படையில், அப்பகுதியில் அகழாய்வு செய்ய, மத்திய, மாநில அரசின் தொல்லியல் துறைகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றனர்.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அகழாய்வு செய்தால், கொங்கு மண்டல பகுதியின் தொன்மையான வரலாறு தெரியவரும். இதுகுறித்து, உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.