சென்னை:மோசடி வழக்கில் கைதான 'ஆருத்ரா கோல்டு' நிறுவன இயக்குனர்கள் ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மாதம்தோறும் 10 - 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் 2438 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து நிறுவன இயக்குனர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இயக்குனர்கள் உட்பட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இயக்குனர்கள் ராஜசேகர் அவரது மனைவி உஷா மைக்கேல்ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பினர்.
இந்நிலையில் நிறுவன இயக்குனர்களான சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாலதி 50, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பா.ஜ. நிர்வாகி ஹரீஷ் 35 ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கைதான இருவரை 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனு செய்தனர்.
விசாரித்த நீதிபதி ஜி.கருணாநிதி இயக்குனர் ஹரீஷை நான்கு நாட்கள் மாலதியை ஒரு நாள் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.