திருப்பூர்:கட்டணம் என்ற பெயரில் பக்தர்களிடம் பகல் கொள்ளையடிக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மிக முக்கியமான பூஜையான சண்முகா அர்ச்சனை கட்டணமாக, 1500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, 5,000 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்செந்துார் முருகப்பெருமானுக்கு என நிலங்கள், கட்டடங்கள், உண்டியல் மூலமாக ஆண்டுக்கு, 30 கோடிக்கும் மேல் வருமானம் வருகிறது.
இந்த வருமானம் மூலமாக கோவிலுக்கு என, எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. தமிழக கோவில்களில் ஹிந்து சமய அறநிலையத்துறை வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
பக்தர்கள் அதிகமான அளவில் அர்ச்சனை செய்வதற்கு ஏதுவாக, வருமானம் வரும் கோவில்களில் அர்ச்சனை கட்டணத்தை குறைக்க வேண்டுமே ஒழிய அதிகரிக்க கூடாது. எனவே, கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.