கோவை;கோவையில் இந்து முன்னணி நிர்வாகியிடம் இருந்து இரு நாட்டு கைத்துப்பாக்கிகள், 5 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் சுங்கம் பார்க் டவுன் பகுதியில் எஸ்.ஐ., வசந்தகுமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியில் வந்த, இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்திரன் என்கிற அயோத்தி ரவி, 45, என்பவரை வழிமறித்து சோதனையிட்டனர்.
அவரது இடுப்பில் உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக அவரை கைது செய்தனர். புலியகுளத்தில் அவரது வீட்டில், துணை கமிஷனர் சந்தீஷ், உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இதில், மற்றொரு நாட்டு கைத்துப்பாக்கியும், 5 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
துப்பாக்கிகளை நண்பர்களின் உதவியுடன் சென்னையில் வாங்கியதாக, ரவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.