ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மலர் கண்காட்சி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்கா பணிகளில், 900 பேர் பணி புரிகின்றனர். இவர்கள், 'தங்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி தர வேண்டும்; பூங்கா பண்ணை பணியாளர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் காலியாக உள்ள மஸ்துார் பணியில் இடம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 23ம் தேதி முதல் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆறாவது நாளாக நேற்று பூங்கா வளாகத்தில், 25 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும், மற்ற தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாவட்ட செயலாளர் போஜராஜன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில்,'பூங்கா தற்காலிக ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு; 2,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். 1972ம் ஆண்டு சட்டப்படி, பணி கொடை வழங்க பரிந்துரை செய்யப்படும்' என, உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், 'ஊழியர்களின் பிரதான கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்கும் வரை போராட்டம் தொடரும்' என, போஜராஜன் தெரிவித்தார். தொடர் போராட்டம் காரணமாக, கோடை சீசனுக்கான மலர் கண்காட்சி பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.