''சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கர் குறித்து அவதுாறாக பேசுவதை ராகுல் தவிர்க்க வேண்டும். இதுபோல் பேசினால், லோக்சபா தேர்தலின் போது மஹாராஷ்டிராவில் காங்., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும்,'' என, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை பற்றி அவதுாறாக பேசிய வழக்கில் தண்டனை பெற்றதால், லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதியிழப்பு செய்யப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல், 'என் பெயர் சாவர்க்கர் அல்ல. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்' என, குறிப்பிட்டார்.
![]()
|
இதற்கு, மஹாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவரும், காங்., கூட்டணியில் உள்ளவருமான உத்தவ், இதற்காக ராகுலை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள காங்கிரசின் மற்றொரு கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசும் இந்த விஷயத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளது. புதுடில்லியில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், இது குறித்து தன் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார்.
இது பற்றி அவர் பேசியதாவது:
வீர் சாவர்க்கர் குறித்து பேசுவதை ராகுல் தவிர்க்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயத்தில் தலையிடுவது சரியல்ல.
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் கட்சி அடங்கிய கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், சோனியாவிடமும், ராகுலிடமும் இது குறித்து நேரடியாகவும் சரத் பவார் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சரத் பவார் அறிவுரையை ஏற்று செயல்பட, காங்., முடிவு
செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், ''வீர் சாவர்க்கர் குறித்து பேசியதற்காக ராகுல் மீது அவதுாறு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.- புதுடில்லி நிருபர் -