வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : காலி பணியிடங்களை விரைந்து நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலையில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் நேற்று காலை பேரணி நடந்தது.
அதில், 15 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், பேரணியில் பங்கேற்றவர்கள், எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாக சென்று, அங்கேயே மாலை வரை அமர்ந்திருந்தனர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும் தலைமை செயலகம் சென்று, முதல்வரின் செயலர் உதயச்சந்திரனை சந்தித்து மனு வழங்கினர்.
![]()
|
மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:
மின் வாரியத்தில், 54 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அதிக ஆபத்து உள்ள மின் வினியோக பணிகளில், 'அவுட்சோர்சிங்' முறையில் தற்காலிகமாக ஊழியர்களை நியமிக்கக் கூடாது.
புதிய பதவிகளை உருவாக்குதல், பணப்பயன் உள்ளிட்டவைக்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும். 2019 டிசம்பர் முதல் நிலுவையுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேரணியால் அண்ணாசாலை, புதுப்பேட்டை, எழும்பூர், வாலாஜா சாலை உள்ளிட்ட இடங்களில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.