வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1 பொது தேர்வு தேவையா என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, 2017 - 18ல் பொதுத்தேர்வு அமலுக்கு வந்தது. அதன் பின், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 படிக்காமல், பள்ளி படிப்பை பாதியில் கைவிடுவது அதிகரித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த, 50 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வுக்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆகினர். இதுகுறித்து, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், இரண்டு வாரங்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
![]()
|
இதில், பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர்ந்தால், பிளஸ் 2வில் இடைநிற்றல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வு முறையை தொடர்வதா, நிறுத்துவதா என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், இன்றும், நாளையும், ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதில், மாவட்ட வாரியாக பொதுத்தேர்வு செயல்பாடுகள், வரும் கல்வி ஆண்டுக்கான திட்டங்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் கருத்துகளை பகிர உள்ளனர். அவர்களின் கருத்துகளின்படி, அடுத்தகட்ட நடவடிக்கை இறுதி செய்யப்பட உள்ளது.