தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. குஜராத்தைச் சேர்ந்த, 'சைடஸ் லைப் சயின்ஸ்' நிறுவனத்தின் மருந்துகள் தரமற்றது எனக்கூறி, இவை, அமெரிக்க சந்தையில் இருந்து சமீபத்தில் திரும்பப் பெறப்பட்டன.
இதே போல், நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் இருமல் மருந்து, கடந்த ஆண்டு, மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில், 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பல்வேறு மருந்து நிறுவனங்களும் இது போன்ற புகாரில் சிக்கின.
இந்நிலையில், டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆணையம், 76 நிறுவனங்களின் மருந்துகள் தரம் குறித்து சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில், தரமற்ற புகாரில், 18 மருந்து நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், உற்பத்தியை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், 26 மருந்து நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.