4 அடி நீள நாகப்பாம்பு
சாலைக்கு வந்ததால் பரபரப்பு
நாமக்கல்-சேலம் பிரிவு சாலை அருகே, நேற்று காலை, 10:00 மணிக்கு, 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று சாலையில், அங்கும் இங்கும் ஊர்ந்து கொண்டிருந்தது. இதை பார்த்த
அப்பகுதி மக்கள்
தலைதெறிக்க ஓடினர்.
பின், சாலையில் பதிக்க வைக்கப்பட்டிருந்த ஒயர் உருளையில் சென்று பாம்பு பதுங்கி கொண்டது.
இதுகுறித்து, நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மினி தீதடுப்பு வாகனம் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பை பிடிக்கும் கருவி மூலம் லாவகமாக பிடித்து, காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரிக்கரை சாலை
விரிவுபடுத்த கோரிக்கைகஸ்துாரிப்பட்டி ஏரிக்கரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், விரிவுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
எருமப்பட்டி அருகே, துறையூர் சாலையில் கஸ்துாரிப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரை மீது, கஸ்துாரிப்பட்டி, முட்டாஞ்செட்டி
உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர்
அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எதிரெதிரே வாகனங்கள் வரும் போது ஒதுங்கி வழிவிட முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஏரிக்கரை சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனைவி மாயம்
கணவர் புகார்
'தேவராயபுரத்தில் தனியாக வசித்து வந்த மனைவியை காணவில்லை' என, கணவர் போலீசில் புகாரளித்துள்ளார்.
எருமப்பட்டி அருகே, தேவராயபுரம் போயர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 43; மனைவி சுமதி, 36; இவர்களுக்கு கடந்த, 20 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 13 வயதில் மகள் உள்ளார்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த, 7 ஆண்டாக சுமதி, தன் மகளுடன் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த சுமதி, திடீரென காணாமல் போனதாக அவரது மகள் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகார்படி, எருமப்பட்டி போலீசார் சுமதியை தேடி வருகின்றனர்.
அரசு மகளிர் கல்லுாரியில்
இயற்பியல் மன்ற கூட்டம்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், இயற்பியல் துறை சார்பில் மன்ற கூட்டம் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) எமிமாள் நவஜோதி தலைமை வகித்தார். துறைத்தலைவர் சித்ராதேவி முன்னிலை வகித்தார்.
முசிறி அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜ்குமார் பங்கேற்று, பொருளறிவியலின் செய்முறை விளக்கம் என்ற தலைப்பில் பேசினார். கூட்டத்தில் பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
8 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில், சாலையோர கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள், ஓட்டல், பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.இதில், கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள்
உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், 8 கிலோ பறிமுதல் செய்து, 4,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், இருதுறை அதிகாரிகளால் தினசரி ஆய்வு நடத்தப்படும் என, எச்சரிக்கை விடுத்தனர்.
நகராட்சி சார்பில் எஸ்.ஓ., செல்வராஜ், சந்தானகிருஷ்ணன், ஜான்ராஜா, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உதவி பொறியாளர்கள்
சந்தானம், விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குப்பையால்
சாக்கடை அடைப்புசாலையோரம் குப்பை கொட்டுவதால், சாக்கடையில் அடைப்பை ஏற்படுத்துகிறது.
ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சியில் அப்பகுதி மக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து, சாக்கடையில் விழுந்து கழிவுநீர் செல்ல வழியின்றி அடைத்துவிடுகிறது.
இதனால், சர்ச்சுக்கு செல்லும் சாலை அருகே சாக்கடை நீர் வழிந்து ஆத்துார் பிரதான சாலைக்கு வந்து
விடுகிறது. எனவே, காக்காவேரி பகுதியில் குப்பை, சாக்கடை நீர் தேங்காமல் செல்ல வழி செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு கலை கல்லுாரியில்
வேதியியல் ஆய்வகம் திறப்பு
குமாரபாளையம் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லுாரியில், வேதியியல் ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லுாரியில், ஒன்பது இளநிலை பாடப்பிரிவுகளும், ஐந்து முதுநிலை பாடப்
பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. 1,250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில் அறிவியல் பாடப்பிரிவான இளநிலை வேதியியல் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக, 12 லட்சம் ரூபாய் செலவில் வேதியியல் ஆய்வகம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முதல்வர் ரேணுகா தலைமை வகித்து, ஆய்வகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, செய்முறை பயிற்சியை துவக்கி வைத்தார். பேராசிரியர் கோவிந்தராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மொபட் மீது அரசு பஸ்
மோதி விவசாயி பலிமொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், விவசாயி பரிதாபமாக பலியானார்.
திருச்சி மாவட்டம், மேய்க்கல்நாய்க்கன்பட்டி அடுத்த எம்.களத்துார் பில்லுக்காட்டை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி, 65. இவர், நேற்று முன்தினம் காலை, 4:00 மணிக்கு, தனது, 'டி.வி.எஸ்.,' மொபட்டில், கொய்யா பழங்களை எடுத்துக்கொண்டு, நாமக்கல் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக சென்றார்.
நாமக்கல் சந்தைப்பேட்டைபுதுார் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, மொபட் மீது, அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிசாமியை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
வக்கீல்கள் நீதிமன்ற
புறக்கணிப்பு போராட்டம்துாத்துக்குடியில், கடந்த மாதம் வக்கீல்
முத்துக்குமார் பட்டப்பகலில் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். அதேபோல், கடந்த, 26ல், சென்னை சைதாப்பேட்டை வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ், சமூக விரோதிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வக்கீல் துரைசாமி வீட்டில், இரவில் அத்துமீறி நுழைந்து, மூன்று டிராக்டர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தினர்.
தொடர்ந்து, துரைசாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும், வக்கீல்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று, நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அதையொட்டி, 'நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், பரமத்தி, ராசிபுரம், திருச்செங்கோடு என, மாவட்டம் முழுவதும், 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள், இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்றதாக' கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தி.மு.க., முகவர் கூட்டம்
குமாரபாளையம் நகர தி.மு.க., அலுவலகத்தில் நகர செயலர் செல்வம் தலைமையில், ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், நேற்றுநடந்தது. மாவட்ட செயலர் மதுரா செந்தில் கலந்துகொண்டார். லோக்சபா தேர்தலில், 'பூத்'
முகவராக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து, குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவருமான மகேந்திரன் ஆலோசனை வழங்கினார்.
ரூ.90 லட்சத்துக்கு
பருத்தி விற்பனை
நாமக்கல், மார்ச் 29--
நாமக்கல்லில், திருச்செங்கோடு சாலையில் செயல்படும், கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது.
நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் மாவட்ட பகுதி விவசாயிகள், 4,250 மூட்டைகள் கொண்டு வந்தனர். ஆர்.சி.ெஹச்., ரகம் குவிண்டால், 5,679 முதல் 7,639 ரூபாய்; சுரபி ரகம், 7,389 முதல் 8,109 ரூபாய்; கொட்டு மட்டரகம், 3,639 முதல் 5,635 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 90 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்றது.
கொளுத்தும் கோடையை சமாளிக்க
தொட்டிக்கு தண்ணீர் விட கோரிக்கை
நாமகிரிப்பேட்டை, மார்ச் 29-
மூலப்பள்ளிப்பட்டி பகுதியில், சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்ப மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சி, புதுப்பட்டி சாலை ஓடை பகுதியில் கடந்த, 8 ஆண்டுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் மட்டுமின்றி, இவ்வழியாக செல்லும் பயணிகளுக்கும் உதவியாக இருந்தது. சில ஆண்டுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியதால், சின்டெக்ஸ் டேங்கிற்கு தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது. தற்போது கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க, மீண்டும் ஆழ்துளை கிணறுகள் மூலம் புதுப்பட்டி ரோட்டில் உள்ள சின்டெக்ஸ் டேங்கிற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.