ஓசூர்: சூளகிரியில் பழைய, புதிய ஒன்றிய அலுவலக வளாகத்தில் பல அரசுத்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் மற்றும் அரசு அலுவலர்கள் வந்து செல்கின்றனர். அங்கு நேற்று காலை, அண்ணா நகரை சேர்ந்த ராஜா, 25, என்பவர் குடிபோதையில் அரிவாளை வந்தார். பின்னர் பழைய ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் புகுந்து, அங்கு காலை உணவு திட்ட பயிற்சிக்கு வந்த பெண்கள், சாலையில் செல்வோரை அரிவாளை வைத்து வெட்டுவது போல் சென்றார். பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். தகவலின்படி வந்த சூளகிரி போலீசார், ராஜாவிடமிருந்து அரிவாளை பறிக்காமல், அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து விட்டு அனுப்பினர்.
மாலையில் மீண்டும் பழைய ஒன்றிய அலுவலகம் முன்புள்ள ஓட்டலுக்குள் அரிவாளுடன் சென்ற ராஜா தகராறு செய்தார். அவரை ஓட்டல் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து விரட்டினர். பின், பழைய கிருஷ்ணகிரி சாலையில் சுற்றித்திரிந்தார். தகவலறிந்த போலீசார் அங்கு வந்து போதையிலிருந்த ராஜாவை கைது செய்யாமல் கண்டித்து விட்டு சென்றனர். அதனால் அவர், தொடர்ந்து அப்பகுதியில் மக்களை அச்சப்படுத்தும் படி அரிவாளுடன் சுற்றித்திரிந்தார்.