ஓசூர்; சூளகிரி ஒன்றியம், காளிங்கவரம் பஞ்.,ல், சின்னமட்டமபள்ளி, கொடிதிம்மனப்பள்ளி, தின்னுார், அக்ரஹாரம், ஜெவுக்குபள்ளம், குருமூர்த்தி கொட்டாய், காளிங்கவரம் என மொத்தம், 7 கிராமங்கள் உள்ளன. இங்கு மொத்தம், 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி, துணை சுகாதார நிலையம், தமிழ்நாடு கிராம வங்கி, தபால் நிலையம், மக்கள் சேவை மையம் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ள இக்கிராமங்களில், மொபைல்போன் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. அதன் காரணமாக, தொழில், வியாபாரம் போன்றவற்றில், இக்கிராமங்கள் பின்நோக்கி சென்றன.
கொரோனா காலக்கட்டத்தில், மொபைல்போன் வழியாக ஆன்லைன் வகுப்பில் கூட மாணவ, மாணவியரால் சரியாக படிக்க முடியவில்லை. தண்ணீர் தொட்டிகள் மீதேறி ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வந்தனர். இது தொடர்பாக, 'காலைக்கதிர்' நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது.
இந்த தகவல், மத்திய, மாநில அரசுகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து, காளிங்கவரம் கிராமத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் டவர் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதனால், 15 ஆண்டுக்கும் மேலாக மொபைல் சிக்னல் இல்லாமல் சிரமப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.