அரூர்: அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்., பூமரத்து கொட்டாயில், காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை காக்க, அப்பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோத மின்வேலி அமைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆண் காட்டெருமை ஒன்று சிக்கி பலியானது. அதை அவர்கள் வனத்துறையினருக்கு தெரியாமல் குழிதோண்டி புதைத்துள்ளனர். ரகசிய தகவலின்படி, தர்மபுரி உதவி வன பாதுகாவலர் வின்சென்ட், அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டன் மற்றும் வனத்துறையினர் காட்டெருமை புதைத்த இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது, உலர்ந்த கொம்புடன் கூடிய காட்டெருமை தலை சிதைந்த நிலையில், எலும்புகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 42, சக்திவேல், 39, சின்னராமன், 63, ஆகிய மூவரை அரூர் வனத்துறையினர் கைது செய்தனர்.