தர்மபுரி: ஒருமுறை மட்டும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத, தர்மபுரி மாவட்டத்தை உருவாக்குதல் குறித்து, தர்மபுரி மாவட்டம் நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுத்துறை சார்பாக நேற்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். இது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக, தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. அங்கு, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராகவும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் முதல், ஐந்து இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலட்சுமி, உதவி செயற்பொறியாளர் லாவண்யா, தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ., குணசேகரன் உட்பட, பலர் பங்கேற்றனர்.