கிருஷ்ணகிரி: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 15 ஆண்டுகளுக்கு மேல், அதாவது, 2006, 2007 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பெங்களுரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 15 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பிரித்து வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் திறந்தார். அப்போது, அவர் கூறியதாவது:
கடந்த தேர்தலில் பயன்படுத்தியதில், 359 கன்ட்ரோல் யூனிட், 1,415 பேலட் யூனிட் என மொத்தம், 1,774 இயந்திரங்கள், 15 வருடங்களுக்கு மேலானவை என கண்டறியப்பட்டு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இவை வரும், ஏப்., 28ல் பெங்களுரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.