ஈரோடு மாநகராட்சி
கமிஷனர் நியமனம்
ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய சிவக்குமார், கடந்த, 24ல், கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தஞ்சாவூர் நகராட்சிகளின் மண்டல நிர்வாக துணை இயக்குனராக பணியாற்றிய ஜானகி ரவீந்திரன், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
முத்துமாரியம்மன் விழா
பூச்சாட்டுதலுடன் துவக்கம்
ஈரோடு, திருநகர் காலனி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஏப்., 1ல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் நடுதல், 2ல், அதிகாலை 4:00 மணிக்கு, காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல். 3ல், இரவு அம்மன் திருவீதி உலா, 4ல், திருவிளக்கு பூஜை நடக்கிறது. 6ல், தெப்பத்தேர், 7ல் இரவு இன்னிசை கச்சேரி, 8ல், கம்பம் எடுத்தல், 9ல், மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
வரும் 31ல் வேளாண்
குறைதீர் கூட்டம்
ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் வரும், 31 காலை, 10:00 மணிக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடக்க உள்ளது. அன்று காலை, 10:00 முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 முதல், 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
வட்டார வளர்ச்சி
அலுவலர் பொறுப்பேற்புஈரோடு ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராமம்) பணியாற்றிய லதா, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பஞ்சாயத்து அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டம் பவானி தணிக்கை துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராமம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
தேங்கிய குப்பையால்
கடும் சுகாதாரக்கேடு
கோபி வாய்க்கால்மேடு பகுதியில், தேங்கிய குப்பையால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
கோபி அருகே கொளப்பலுார் பிரதான சாலை வழியில், வாய்க்கால்மேடு பஸ் ஸ்டாப்பில், ஏராளமான டீக்கடைகள் உள்ளன. இங்கு பயன்படுத்திய காகித டீ கப்புகள், பாலிதீன் கவர்கள் அங்கு மழைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் ஈக்கள் மொய்த்து, கடும் சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாய்க்காலில்
பெண் சடலம் மீட்பு
கொடுமுடி தாலுகா, பாசூர் கிராமம் பழனிகவுண்டன் பாளையம் காலிங்கராயன் வாய்க்காலில் கடந்த, 27 காலை, 9:00 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க பெண் நீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். பாசூர் வி.ஏ.ஓ., சுதாகர், உடலை மீட்க ஏற்பாடு செய்தார். இறந்த பெண் ஊதா நிற பேன்ட், ஊதா நிற பூ டிசைன் போட்ட சுடிதார் அணிந்திருந்தார். உடலில் காயங்கள் இல்லை. நீச்சல் தெரியாமல் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. மலையம்பாளையம் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மோசமான சாலையால்
முத்துசா வீதியில் அவதி
கோபி முத்துசா வீதியில், ஏராளமான பல சரக்கு கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளன. இதனால், எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்குள்ள சாலை, படுமோசமாக குண்டும், குழியாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே பாதசாரிகள் முதல், டூவீலர்களில் செல்வோர் வரை அவதியுறுகின்றனர். எனவே, சாலையை
சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறந்த நிலையில்
தொழிலாளி உடல்
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்த ஆறுமுகம், 50, கட்டட தொழிலாளி. ஈரோடு வைராபாளையம் கோல்டன் கார்டனில், காலி இடத்தில் சிறிய அறையில், ஏழு மாதங்களாக தங்கி வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 27ல் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. உட்புறமாக தாழிட்டு இருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது, படுக்கையில் இறந்து கிடந்தார். அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்த நோய் இருந்தது. இதுபற்றி அவரது மகன் அஜய் கொடுத்த புகார்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாய் மாயமானதாக
போலீசில் மகள் புகார்
கோபி அருகே, கமலா ரைஸ் மில் வீதியை சேர்ந்தவர் கொமராயாள், 83. இவர் கடந்த பிப்.,7ல், வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகள் பத்மா, 55, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
காதல் திருமணம் செய்த
ஜோடி போலீசில் தஞ்சம்
கோபி, மார்ச் 29-
கோபி அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 24, மிஷின் ஆப்பரேட்டர்; இவரும் சிங்கிரிபாளையத்தை சேர்ந்த பூவிதா, 21, என்பவரும், ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தனர்.
இந்நிலையில், கணக்கம்பாளையம் அருகே பகவதி அம்மன் கோவிலில் இருவரும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால், பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீசில் நேற்று தஞ்சமடைந்தனர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொடுமுடியில்
ரத்ததான முகாம்
கொடுமுடி, மார்ச் 29-
கொடுமுடியில் நடந்த, ரத்ததான முகாமில், 23 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
சென்னசமுத்திரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கொடுமுடி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். இதில், கொடுமுடி பேரூராட்சி பணியாளர்கள் ஏழு பேர், வெங்கம்பூர் பேரூராட்சி பணியாளர்கள் நான்கு பேர், பொதுமக்கள் 12 பேரிடம் இருந்து, 23 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், சுகாதார ஆய்வாளர்கள் உதயகுமார், வசந்தகுமார் மற்றும்
பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சத்தி மார்க்கெட்டில்
முல்லை கிலோ ரூ.540
சத்தியமங்கலம், மார்ச் 29-
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் முல்லை பூ கிலோ, 540 ரூபாய்க்கு ஏலம் போனது.
மல்லிகை பூ, 420, காக்கடான், 300, செண்டுமல்லி, 75, கோழிகொண்டை, 110, கனகாம்பரம், 250, சம்பங்கி, 40, அரளி, 100, துளசி, 40, செவ்வந்தி, 240 ரூபாய்க்கு விற்பனையானது.
கம்யூனிஸ்ட் கட்சி
தெருமுனை பிரசாரம்
தாராபுரம், மார்ச் 29-
மத்திய அரசின் போக்கை கண்டித்து, தாராபுரத்தில் சி.பி.ஐ.(எம்) கட்சி சார்பில், தெருமுனை பிரசாரம் நடந்தது. தாராபுரம், பழைய நகராட்சி அலுவலகம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தெருமுனை பிரசாரத்தில், மத்திய பா.ஜ., அரசு, மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பணம் கேட்டு மிரட்டிய
நான்கு பேர் அதிரடி கைது
ஈரோடு, மார்ச் 29-
ஈரோடு, அசோகபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 36. நேற்று காலை சம்பத் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த இருவர் மணிகண்டனை நிறுத்தி, கத்தியை காட்டி பணம் கேட்டனர். மணிகண்டன் கூச்சலிடவே இருவரும் தப்பினர்.
இதேபோல், வீரப்பன் சத்திரம் சோழன் நகரை சேர்ந்த சுதாகரன், 46, சூளை டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் தட்டி கேட்டதும் இருவரும் தப்பினர். வீரப்பன் சத்திரம் போலீசார் விசாரித்து, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கொத்தபுரத்தை சேர்ந்த சந்தோஷ், 23, கடகாத்துாரை சேர்ந்த முத்துக்குமார், 26, கர்நாடகா மாநிலம் நாகநாதபுரம் அஜித், 24, பார்ப்பன அக்ரஹாரத்தை சேர்ந்த மஞ்சுநாத், 26, ஆகியோரை
கைது செய்தனர்.
மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு
காங்கேயம், மார்ச் 29-
காங்கேயம் அருகே, சிவன்மலை ஊராட்சியில் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த
விழிப்புணர்வு நடந்தது.
திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காங்கேயம் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிவன்மலை கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ராகவேந்திரன், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.