டி.என்.பாளையம்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டி.என்.பாளையம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
பத்து குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள, பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக உள்ள மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும். காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில், இரண்டு முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும், குழந்தை நல பணியாளர்கள் நலன் கருதியும், கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை விடவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* ஈரோடு, ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணை தலைவர் மணிமாலை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராதாமணி, மாவட்ட செயலாளர் சாந்தி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.