சேலத்தில், மாஜிஸ்திரேட்டை கொல்ல முயன்ற அலுவலக உதவியாளருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஜே.எம்., எண் - 4ல் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிபவர் பொன்பாண்டி. கடந்த, 2022 மார்ச், 1ம் தேதி காலை, தன் அலுவலகத்தில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த அலுவலக உதவியாளர் பிரகாஷ், 37, மேட்டூருக்கு இடமாறுதல் தர வேண்டும் என்று பேசி கொண்டிருந்தவர், திடீரென மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்தினார்.
அவர் சுதாரித்து தடுக்கவே, லேசான காயத்துடன் தப்பினார். அஸ்தம்பட்டி போலீசார் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி ரவி நேற்று தீர்ப்பளித்தார். மாஜிஸ்திரேட்டை கொல்ல முயன்ற பிரகாஷுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.