பெண்ணின் தொண்டையில் சிக்கிய ஊக்கை 'என்டோஸ்கோபி' முறையில் அரசு டாக்டர்கள் அகற்றினர்.
திருப்பூர், கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை, 36. வாயில் வைத்திருந்த ஊக்கை தவறுதலாக விழுங்கி விட்டார். வலி ஏற்பட்டதுடன், எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவுக்கு சென்றார். பணியில் இருந்த டாக்டர் சுரேஷ்ராஜ்குமார், எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, தொண்டையில் திறந்த நிலையில் ஊக்கு சிக்கி இருப்பது தெரிந்தது. உடனே, 'என்டோஸ்கோபி' முறையில் ஊக்கு அகற்றப்பட்டது; இதனால், அப்பெண் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
மருத்துவக்கல்லுாரி டீன் முருகேசன் கூறுகையில்,''தொண்டையில் சிக்கிய ஊக்கு திறந்த நிலையில் இருந்தால் எடுப்பது சிரமம். இருப்பினும், டாக்டர் மயக்கமருந்து கொடுத்து 'என்டோஸ்கோபி' முறையில் எளிமையாக அகற்றி விட்டனர். பெண் நலமுடன் உள்ளார். இதுபோன்ற பிரச்னை ஏற்படும் போது சுய வைத்தியம் செய்யாமல், நேரடி மருத்துவமனைக்கு வந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது,'' என்றார்.