வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர் போல காட்டிக்கொள்வதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, அதானியின் ரூ.20,000 கோடி மதிப்பு உள்ள ஷெல் நிறுவனங்களின் சொந்தக்காரார் யார்? லலித் மோடியா? நீரவ் மோடியா? மெஹூல் சோக்சியா? விஜய் மல்லையாவா? ஜெடின் மேதாவா? "ஊழல் பிரசாரத்தை விரட்டுவோம் திட்ட" உறுப்பினர்களா? நீங்கள் தான் அந்த கூட்டணியின் தலைவரா? உங்களை நீங்களே 'ஊழலுக்கு எதிரானவர்' போல காட்டிக்கொள்வதை நிறுத்துங்கள். முதலில் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்.
கர்நாடகாவில் உங்கள் அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்று குற்றம் சாட்டப்படுவது ஏன்? மேகாலயாவின் நம்பர் ஒன் ஊழல் அரசில் நீங்கள் ஏன் அங்கம் வகிக்கிறீர்கள்?
ராஜஸ்தானில் சஞ்சீவனி கூட்டுறவு ஊழல், மத்திய பிரதேசத்தில் போஷன் ஊழல், சத்தீஸ்கரில் என்.ஏ.என்., ஊழல் ஆகியவற்றில் பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்பில்லையா? 95 சதவீத எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு. ஆனால் பா.ஜ.,வில் உள்ள தலைவர்கள் எல்லாம் வாஷிங் மிஷின் மூலம் சுத்தம் செய்யப்பட்டவர்களா?
உங்களுக்கு (பிரதமருக்கு) திராணி இருந்தால், பார்லி., கூட்டுக்குழுவை அமைத்துவிட்டு, 9 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு வெளிப்படையான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துங்கள் பார்ப்போம். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.