உளுந்தை:கடம்பத்துார் ஒன்றியத்தில் அமைந்துள்ளது உளுந்தை ஊராட்சி. இந்த ஊராட்சியில் அனுமதியின்றி அரசு நிலங்கள் ஆக்கிரமிப்போடு தனியார் ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி குறித்து கேட்டபோது, முறையான தகவல் அளிக்காமல் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், இந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில், சர்வே எண் 357/14ல், 31 சென்ட் கிராம நத்தம் என்ற அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதன் இன்றைய மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
தொழிற்சாலையை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதால், சர்வே எண் 357/9ல் 5 ஏக்கர் வரதப்பன் குட்டையில் 100 நாள் திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
இதுகுறித்து உளுந்தை ஊராட்சி தலைவர் எம்.கே.ரமேஷ், திருவள்ளூர் தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார்.
இதையடுத்து, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவுப்படி, நேற்று திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், உளுந்தை கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் அதிகாரிகள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தொழிற்சாலையில் 31 சென்ட் கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்தது தெரிய வந்தது.
மேலும், 5 ஏக்கர் வரதப்பன் குட்டையும் எவ்வித பாதையும் இல்லாமல் தொழிற்சாலையில் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தாசில்தார் மதியழகன், தொழிற்சாலை உரிமையாளரிடம், '31 சென்ட் கிராம நத்தத்தை சுற்றி சுற்றுச்சுவரை ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும். மேலும், வரதப்பன் குட்டைக்கு பொதுமக்கள் வரும் வகையில் பாதை அமைக்க வேண்டும்.
'நான்கு ஆண்டுகளாக அனுமதியில்லாமல் இயங்கும் நிலையில், விரைவில் அனுமதி பெற்று தொழிற்சாலையை நடத்தவும் ஊராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்' என, எச்சரித்து சென்றார்.