வால்பாறை: வால்பாறையில், திறந்தவெளியில் குவிக்கப்படும் குப்பையால், துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணியர் அதிகம் வரும் வால்பாறையில், திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது. இங்கு வசிக்கும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியாகும் குப்பையை ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள திறந்தவெளி குப்பை கிடங்கில் குவிக்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால், குப்பைக்கழிவுகளால் நகரில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. வால்பாறை நகரில் வெளியாகும் குப்பை உடனுக்குடன் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சியில், தினமும் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவு ஸ்டேன்மோர் ரோட்டில் திறந்தவெளியில் கொட்டப்படுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடைகளில் வெளியாகும் இறைச்சி கழிவு சாலையோரம் கொட்டப்படுவதால், துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வால்பாறை நகரில் வெளியாகும் குப்பையை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குவிப்பதை தவிர்க்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.