திருத்தணி:திருத்தணி அடுத்த, கன்னிகாபுரம் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் காப்புக்காடு உள்ளது.
இந்த காப்புகாட்டில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை வழியாக பி.சி.என். கண்டிகை, பெரியகடம்பூர், சின்னகடம்பூர், குருவராஜபேட்டை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அரசு பேருந்துகள் செல்கின்றன.
இந்நிலையில், பி.சி.என். கண்டிகைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் வீசுவதை கண்டறிந்து திருத்தணி வனத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, திருத்தணி போலீசார் மற்றும் வனத் துறை அலுவலர்கள் மேற்கண்ட பகுதியில் காப்பு காட்டில் இருந்து, 150 மீட்டர் துாரம் நடந்து சென்ற போது, 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து எலும்பு கூடாக இருந்ததை கண்டனர்.
அதை தொடர்ந்து, திருத்தணி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை செய்தனர்.
இறந்தவர் அருகில் துணிபை ஒன்று இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இறந்தவரின் பெயர், விலாசம் தெரியவில்லை.
இறந்தவர் குடும்ப தகராறு காரணமாக காப்புக் காட்டிற்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டாரா இல்லை முன்விரோதம் காரணமாக கொலை செய்து காப்பு காட்டில் வீசி சென்றார்களா என, பல்வேறு கோணங்களில் திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவில் தான் உண்மை நிலவரம் தெரிய வரும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.