வால்பாறை: வால்பாறையில், அறிவிப்போடு நிற்கும் திட்டங்களால் சுற்றுலா பயணியர் கவலையடைந்துள்ளனர்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார், தென் இந்தியாவின் மிக நீளமான சோலையாறு அணை, தேசிய பூங்காவான அக்காமலை புல்வெளி, வனவிலங்குகள், பசுமை மாறாக்காடுகள் நிறைந்து காணப்படுகின்றன.
சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் கோடைவிழா நடத்தப்படுகிறது.
வால்பாறை வரும் சுற்றுலா பயணியர், கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியையும் கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணியர் பொழுதுபோக்கும் வகையில், தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டாலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மேலும், வால்பாறை நகரில் பல கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட படகு இல்லம் திறக்கப்படாமல் இருப்பது, சுற்றுலா பயணியரை கவலையடைய செய்துள்ளது.
சுற்றுலாபயணியரை கவரும் வகையில், பூங்காவை அழகுபடுத்தி திறக்க வேண்டும்; படகு இல்லத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிரதீப்குமார், தங்கும் விடுதி உரிமையாளர்: வால்பாறையில் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்க கோரி பல ஆண்டு காலமாக போராடினோம். அதன்விளைவாக, பூங்கா, படகு இல்லம் அமைக்கப்பட்டது. அதில், பூங்கா மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்லும் வால்பாறையில் சுற்றுலா தகவல் மையம் இல்லை. கட்டி முடிக்கப்பட்ட படகு இல்லம் பயன்பாட்டிற்கு வரவில்லை. சுற்றுலாவளர்ச்சி திட்டங்களை துறை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
அலி, வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பு: வால்பாறையின் இயற்கை அழகை, கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறையை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட படகு இல்லம் திறக்கப்படவில்லை. பூங்கா திறக்கப்பட்டாலும், ஒரு பூச்செடி கூட இல்லை. சுற்றுலா பயணியருக்கு போதிய அடிப்படை வசதிகளும் இல்லை.