கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி அருகே, சுத்தம் செய்யப்பட்ட ஓடையில் குப்பை மற்றும் மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டம்பட்டி பகுதியில் உள்ள, ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி அருகே, ஓடையில் இருந்து கோதவாடி குளத்துக்கு நீர் செல்கிறது. இந்த ஓடை நீண்ட காலமாக, செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி காணப்பட்டது.
தற்போது, கோடை காலம் என்பதால் இந்த ஓடையின் ஒரு பகுதியை, கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பினர் சுத்தம் செய்தனர்.
தற்போது, இந்த ஓடையில், குப்பை மற்றும் மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் துர்நாற்றம் வீசுவதால் பொதுசுகாதாரம் பாதித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓடையில் குப்பை கொட்டுவோர் மீது ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.