சென்னை:சென்னைக்கு குடிநீர் வழங்கும் மூன்று ஏரிகளில் உள்ள உபரி நீர் வெளியேற்றும் ஷட்டர்களை, தானியங்கி முறையில் இயக்கும் பணிகள், 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
↓↓சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நீர்வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
↓சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், அடையாறு ஆற்றின் வடிநிலத்தில் போரூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய இடங்களில், வெள்ள தடுப்பு பணிகள் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
↓சென்னையின் குடிநீர் தேவைக்காக, மாதவரம் ரெட்டேரியை 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, ரெகுலேட்டர் அமைத்து, கொள்ளளவு 0.62 டி.எம்.சி.,யாக உயர்த்தப்படும்.
↓சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு, நீர்வழித்தடங்களில் 12 இடங்களில் ரெகுலேட்டர் அமைக்கப்படும். தணிகாசலம் நகர் வாய்க்காலில் திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம், 94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
↓திருவள்ளூர் மாவட்டம், சடையங்குப்பம் மற்றும் இடையஞ்சாவடி கிராமங்களுக்கு இடையே, கொசஸ்தலையாற்றின் குறுக்கே, கடைமடை ரெகுலேட்டர் அமைப்பதற்கு, விரிவான திட்ட அறிக்கை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆமுல்லைவாயில் மற்றும் சடையங்குப்பம் கிராமங்களில், புழல் ஏரி உபரி நீர் கால்வாயை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தயாரிக்கப்படும்.
↓சென்னை மாநகராட்சி குடிநீர் தேவையை அதிகரிப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலையாற்றில் நான்கு இடங்களில் ஆற்றுக்குள் நீர்த்தேக்கங்கள் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
↓வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் உள்ள உபரி நீரை வெளியேற்றும் ஷட்டர்கள், சாப்ட்வேர் உதவியுடன் தானியங்கி முறையில் இயக்கும் பணிகள் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.