கூடலுார்: கூடலுார் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டத்தில் தீயில் கருகிய தேயிலை செடிகளை பாதுகாக்க சுண்ணாம்பு தெளிக்கப்பட்டுள்ளது.
கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை தோட்டம் வழியாக சென்ற மின் கம்பி, பிப்., 17ல் அறுந்து விழுந்தது. அதில், ஏற்பட்ட தீயில் ஐந்து ஏக்கர் பரப்பிலான தேயிலை செடிகள் எரிந்து சாம்பலானது. சமீபத்தில், இரும்புபாலம் அருகே, டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையை ஒட்டி ஏற்பட்ட தீ டான்டீ தேயிலை செடிகளிலும் பரவியது. அதிகாரிகள், தொழிலாளர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். எனினும் தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டன.
அந்த தேயிலை செடிகளை 'புரூனிங்' செய்து சுண்ணாம்பு தெளிக்கும் பணி நடந்து வருகிறது.
அதிகாரிகள் கூறுகையில்,'தீ ஏற்படும் செடிகள் மீது உடனடியாக சுண்ணாம்பு தெளிப்பதன் மூலம், அவை மீண்டும் முளைத்து விடும். அதன் அடிப்படையில் தேயிலை செடிகளுக்கு சுண்ணாம்பு தெளித்துள்ளோம்,' என்றனர்.