கோவை: கோவை மாவட்ட அளவிலான 'சி' டிவிஷன் கால்பந்து லீக் போட்டியில், ஐ.என்.எப்.சி., அணியை வீழ்த்தி, ஜக்கோபி கார்பன் எப்.சி., அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
கோவை மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் 'ஏ','பி', 'சி' என மூன்று டிவிஷன்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
'சி' டிவிஷன் கால்பந்து போட்டி துவக்கப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு மைதானங்களில் நடத்தப்படுகிறது.
இந்த சீசனின் இரண்டாவது போட்டியில், ஜக்கோபி கார்பன் எப்.சி., மற்றும் ஐ.என்.எப்.சி., அணிகள் கோவைபுதுார் 'ஏ' மைதானத்தில் போட்டியிட்டன.
இப்போட்டியில், ஜக்கோபி அணியின் பெரின் ஆபிரகாம் சிறப்பான துவக்கத்தை அளித்தார். பெரின் தொடர்ந்து இரண்டு கோல்கள் அடிக்க, ஜக்கோபி அணி ஆட்ட நேர முடிவில், 2 - 0 என்ற கோல் கணக்கில் ஐ.என்.எப்.சி., அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.