கோவை: மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட் கிளப் அணி, 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'லட்சுமி கார்டு குளோத்திங் கோப்பைக்கான' முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, அவிநாசி சாலை சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில், சூர்யபாலா கிரிக்கெட் கிளப் மற்றும் ராஜசேகர் மணி எம்.சி.சி., அணிகள் போட்டியிட்டன.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சூர்யபாலா அணியினர், 49 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். அணியின் பிரேம்குமார் (52) அரைசதம் அடித்தார்.
ராஜசேகர் மணி அணியின் முகமது ஆசிப், மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றிக்கு 207 ரன்கள் தேவை என்ற இலக்குடன், களமிறங்கிய ராஜசேகர் மணி அணியின் செந்துார பாண்டி (31*), முகமது ஆசிப் (30) நிதானமாக விளையாடினர்.
அணி, 36.2 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. சூர்யபாலா அணியின் சிகாப்தீன் மூன்று விக்கெட் கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு உதவினார்.
மற்றொரு போட்டியில், ராமகிருஷ்ணா மில்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில், ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.