விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே பாலம் கட்டுமான பணியால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. திருச்சி சாலையின் குறுக்கே கழிவு நீர் கால்வாய்களை இணைக்கும் சிறு பாலம் அமைக்கும் பணிகள் ரூ.30 லட்சம் செலவில், இரு தினங்களாக நடந்து வருகிறது.
இதனால், ஒரு வழிச்சாலையாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால், காலை மற்றும் மாலை அலுவல் நேரங்களில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மாத காலம் இப்பணிகள் நடக்க உள்ளதால், அங்கு சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைக்க வேண்டும் என்று, தினமலரில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார் நேற்று காலை சாலையோரமிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியும், இரு வழிப்பாதையாக அங்கு தடுப்புகள் வைத்தும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்க எடுத்தனர்.