கடந்த 15 ஆண்டுகளாக, கோவைக்கு அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் நேரடித்திட்டங்கள் எதுவுமே இதுவரை செயல்படுத்தப்படாததற்கு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும், மாநில அரசின் குளறுபடியுமே காரணமென்பது தெளிவாகியுள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில், மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில திட்டங்களுக்கு, இரண்டு அரசுகளும் சரி விகித நிதிப்பங்களிப்பு செய்கின்றன. சில திட்டங்கள், மத்திய அரசின் நிதிப்பங்களிப்புடன், மாநில அரசுத்துறைகளால் நிறைவேற்றப்படுகின்றன.
![]()
|
மத்திய பா.ஜ.,அரசால் கோவைக்கு அறிவிக்கப்பட்ட 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கும், மத்திய அரசு 50 சதவீதம் நிதியளித்துள்ளது. மத்திய அரசின் 'அம்ருத்', ஸ்வச் பாரத்' போன்ற பல விதமான திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, கோவையில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
எட்டாத திட்டங்கள்
மத்திய அரசால் கோவைக்கென நேரடியாகவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2010ல், மத்திய அரசின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், நாடு முழுவதும் எட்டு ஐ.ஐ.டி., ஏழு ஐ.ஐ.எம்., 16 மத்திய பல்கலை, 14 உலகத்தர பல்கலைகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதில், உலகத்தரமுள்ள மத்திய பல்கலை அமைப்பதற்கான நகரமாக கோவை தேர்வு செய்யப்பட்டது.
அந்த அறிவிப்பில் இடம் பெற்ற ஐ.ஐ.எம்., திருச்சி என்.ஐ.டி., வளாகத்திலும், மத்திய பல்கலை, திருவாரூரிலும் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் கோவைக்கு அறிவிக்கப்பட்ட உலகத்தரமுள்ள மத்திய பல்கலை, அறிவிப்பு நிலையிலேயே நின்று விட்டது. அடுத்ததாக, 2011ம் ஆண்டில், இந்தியாவின் 19 இரண்டாம் நிலை நகரங்கள், மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தேர்வு பெற்றதிலும் கோவை இடம்பெற்றது.
ஆனால் 12ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான், மாநில அரசால் 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இதற்கு மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதற்குப் பின், 2017ம் ஆண்டில், மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தில், விமான நிலையத்துக்கு இணையான பஸ் ஸ்டாண்டான, 'பஸ் போர்ட்' திட்டத்துக்கும் கோவை தேர்வு செய்யப்பட்டது. கோவையில் இதற்காக மாநகராட்சி தேர்வு செய்து கொடுத்த இடமான வெள்ளலுாரில், மாநகராட்சி குப்பைக்கிடங்கின் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக்கேட்டால் அந்த திட்டமும் கைநழுவிப்போனது.
![]()
|
அக்கறையின்மை
பாரத்மாலா திட்டத்தில், கோவை-கரூர் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கு 2017-2018 பட்ஜெட்டில் ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இப்போது வரையிலும் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை. இதற்கு, 2019ல் கோவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட நடராஜன், இத்திட்டத்துக்குக் காண்பித்த எதிர்ப்பும் முக்கிய காரணம்.
இப்படி கடந்த 15 ஆண்டுகளில், கோவைக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நேரடித் திட்டங்கள் எதுவுமே இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இத்திட்டங்கள் எட்டாக்கனியாக இருப்பதற்கு, இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் அக்கறையின்மையும், தமிழக அரசின் முயற்சியின்மையும் முக்கியக் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.
-நமது சிறப்பு நிருபர்-