கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு லோடு லோடாக கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக, விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவதால், குவாரிகளை அளவிடும் பணியில், கனிம வளத்துறை ஈடுபட்டுள்ளது.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை வட்டாரத்தில் உள்ள குவாரிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லோடுகளில், கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன.
![]()
|
கனிம வளத்துறையில் பெறப்படும் அனுமதிச்சீட்டில் குறிப்பிட்டுள்ள எடையை விட அதிகமான அளவுக்கு, கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதுதொடர்பாக, கலெக்டர் கிராந்திகுமாரிடம் விவசாயிகள் நேரில் முறைகேட்டனர். கூடுதல் எடையில் கனிம வளங்கள் எடுத்துச் சென்றதை பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், பா.ஜ., கட்சியினர் திரண்டு வந்து, டி.ஆர்.ஓ., லீலாவிடம் மனு கொடுத்தனர்.
இதற்கிடையே, கனிம வளத்துறை, வட்டார போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறையை சேர்ந்தவர்களை குழுவாக நியமித்து, கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2 குவாரிகள் விதிமீறல்
கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் இருந்து கனிமங்கள், கேரளாவுக்கு உரிய நடைச்சீட்டு இல்லாமல் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து தணிக்கை செய்யப்படுகிறது.
![]()
|
அனுமதி வழங்கப்பட்ட கனிம இருப்பு கிடங்குகளில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல, புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம், 4 யூனிட் மற்றும், 6 யூனிட் அளவுகளில் போக்குவரத்து நடைச்சீட்டு வழங்கப்படுகிறது. அதில், நாள், நேரம் விடுபட்டு இருந்தாலோ அல்லது திருத்தம் செய்திருந்தாலோ, அனுமதித்த அளவுக்கு அதிகமாக கனிமங்கள் ஏற்றிச் சென்றாலோ அபராதம் விதிக்கப்படுகிறது.
பிப்., 24 முதல் மார்ச் வரை, 1,254 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 2022 ஜூலை முதல், 2023 மார்ச் வரை, அனுமதியின்றி கனிமம் எடுத்துச் சென்ற, 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகளவில் கனிமங்கள் எடுத்துச் சென்ற, 94 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை கண்டறிய, 15க்கும் மேற்பட்ட குவாரிகளை சர்வே செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், 2 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது; அபராதம் விதிக்க இருக்கிறோம்.
குவாரி குத்தகை வழங்கும் சமயத்தில், அரசால் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால், ஜி.பி.எஸ்., உதவியுடன் நில அளவியல் சர்வே செய்து, எல்லைத்துாண்கள் நட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.