வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
சி.குமார், குமரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிற நாடுகளில் நீதிபதிகள், மிகவும் மேம்பட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். தினமும், நான்கைந்து வழக்குகளை மட்டுமே விசாரிக்கின்றனர்.இந்தியாவில் உள்ள நீதிபதிகள், தினமும்,50, 60 வழக்குகளை கையாள்கின்றனர்.இதனால், மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணிச்சூழலை இனிமையானதாக மாற்ற வேண்டும்.
'இந்திய நீதிமன்றங்களில், 4.90 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாய்தா வழங்குவதால், 10 முதல் 15 ஆண்டுகளாக, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு நீதிபதிகளை மட்டும், நாம் குறை சொல்ல முடியாது' என்று, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், கூடுதல் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய, மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
![]()
|
இன்னும், பத்தாயிரம் வழக்குகள்போட்டு விட்டால், நிலுவையில் உள்ளவழக்குகளின் எண்ணிக்கை, சரியாக ஐந்து கோடியை தொட்டு விடும். வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வராமல் இருப்பதற்கு காரணம், 'வாய்தா'க்கள் வாங்குவதே என்று சுட்டிக்காட்டும் அமைச்சர், அதற்கு நீதிபதிகளை மட்டும்குறை சொல்ல முடியாது என்று, அவர்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
ஒரு சில வழக்குகளில், மூன்று வாய்தாக்களுக்கு மேல் வழங்கப்படுவதில்லை. பிரதிவாதி, மூன்றாவது வாய்தாவுக்கும் ஆஜராகாமல், 'டிமிக்கி' கொடுத்தால், வாதிக்கு சாதகமாக, 'எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு' வழங்கி, வழக்கை முடித்து வைக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
பெரும்பாலும் சீட்டுக் கம்பெனி வழக்குகள் மற்றும், 'ரெண்ட் கண்ட்ரோல்' வழக்குகளில் மட்டுமே, இந்த முறை கடைப்பிடிக்கப்படுவதாக அறிகிறோம்.
இந்த மூன்று வாய்தாக்கள் என்பதை, ஐந்து வாய்தாக்கள் என்று உத்தரவிட்டு, அந்த உத்தரவை அனைத்து வழக்குகளுக்கும் நடைமுறைப் படுத்தினால், கோர்ட்டுகளில் தேங்கிக் கிடக்கும், 4.90 கோடி வழக்குகளும், அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் முடித்து வைக்கப்படும்!
நுாறாவது வாய்தாவை நெருங்கி கொண்டிருக்கும், ப.சிதம்பரம் போன்றவர்களின் வழக்குகளும் முடிவுக்கு வரும் அல்லவா? அரசியல்வாதிகள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடக்கூடாது.
செசன்ஸ் கோர்ட்டு, ஐகோர்ட், அதன் பிறகே உச்ச நீதிமன்றம் என்று நெறிமுறைப்படுத்தினாலே, தேங்கி கிடக்கும், 4.90 கோடி வழக்குகளில், நான்கு கோடி வழக்குகள் காலாவதியாகி விடும்.
வக்கீல்களின் சொத்துக் குவிப்புக்கும்,ஒரு வகையில் இந்த வாய்தாக்கள் காரணியாக அமைகின்றன.
'எரிவதை பிடுங்கினால், கொதிப்பது அடங்குவது' மாதிரி, நீதிமன்றம் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் வாய்தாக்களின் எண்ணிக்கையை, ஐந்து என்ற அளவுக்கு நிர்ணயித்து உத்தரவிட்டு, அமல்படுத்தி பார்த்தால் மட்டுமே, தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறையும்; இல்லையேல், வழக்குகளின் எண்ணிக்கை அன்றாடம் கூடியபடி தான் இருக்கும்.