பழநி--பழநி பழைய தாராபுரம் சாலை அருகே சிறுநாயக்கன்குளம் அமைந்துள்ளது. குளத்தின் பாசனப்பகுதி 500 ஏக்கருக்கு மேல் உள்ளது. அருகிலுள்ள காமராஜ் நகர், பெரியப்பா நகர், கோதைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. சில ஆண்டுகளாக இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் குப்பை சேகரிக்கும் இடமாக மாறி உள்ளது. குளத்தின் நீர் மாசடைந்து உள்ளது. குளம் அமலை செடிகளாலும் ,சாக்கடை நீராலும் முற்றிலும் பாழாகி உள்ளது.
அதிக மழை பெய்யும் போது சூளும் தண்ணீரில் கழிவு, வேதிப்பொருட்களால் வெள்ளை நிற நுரை பல அடி உயரத்திற்கு ஏற்படும். சாக்கடை நீர் கலப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. குளத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. மதகுகளும் சேதமடைந்து உள்ளது.இதை துார் வாரி கழிவு நீர் கலப்பதை தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால் களி ல் நோய் தொற்று
நரேந்திரன், காணியாளர், மானியபத்து : சிறு நாயக்கன் குளத்தில் கழிவு நீர் கலப்பதால் விவசாய தொழிலாளர்கள் வயல்களில் இயங்க தயங்குகின்றனர். இறங்கி வேலை செய்யும் போது கால்களில் நோய் தொற்று ஏற்படுகிறது. உடல் நல கோளாறு ஏற்படுகிறது. மதகுகள் சரி செய்யப்பட்டும் இயங்கவில்லை. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மனி தர்களுக் கு பாதிப்பு
மணிகண்டன், பேராசிரியர்: குளத்தில் கழிவு நீர் கலப்பதால் சோடியம், கால்சியம், துத்தநாகம், தாமிரம், உள்ளிட்ட வேதிப்பொருட்கள் , நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருட்கள் குளத்தில் உருவாகிவிடுகிறது.
குளத்து நீரின் ஆக்சிஜன் அளவு குறைந்து இயற்கை தரம் மாறுபடுகிறது.
நீரின், வெப்பநிலை, உப்புத்தன்மை, பி.ஹெச் அளவு முற்றிலும் மாறுபட்டு இயற்கை தாவரங்கள் வளரும் நிலை மாறிவிடுகிறது. நாட்டு தாவரமான அமலை செடி அதிக அளவில் உருவாகிறது.
இது நீர்வாழ் உயிரினங்கள் ,மனிதர்கள் ,குதிரை உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
உயிர்வாழும் தன்மை குறையும்
கோகுல கிருஷ்ணன், சமூக ஆர்வலர், பழநி: சாக்கடை நீர் நேரடியாக கலப்பதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளின் தலைமுறையினர் பாதிக்கப்படுவர். சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் விட வேண்டும். செடிகளால் கொசு உற்பத்தி மிகவும் அதிகரிக்கும். குளங்களில் சூரிய ஒளி செல்லாதவாறு அமலை செடிகள் தடுப்பதால் நீரின் உயிர்வாழும் தன்மை குறைந்து விடும். அதிகாரிகள் கழிவு நீரை குளத்தில் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்,என்றார்.