வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக, வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர் ஜெய்கணேஷ், 33, என்பவர், சில நாட்களுக்கு முன், பெருங்குடியில் உள்ள தன் வீட்டு வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம், வழக்கறிஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக, துாத்துக்குடி முத்துக்குமார், அரியலுார் சாமிநாதன், தர்மபுரி சிவகுமார், சென்னை ஜெய்கணேஷ் என, வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது.
![]()
|
இது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸ் கூறியதாவது:
வழக்கறிஞர்களை தேடி தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். வழக்கறிஞர் தொழில் என்பது எல்லாருக்கும் பொதுவானது தான். ரவுடிகளையும் தங்கள் வாடிக்கையாளராக ஏற்று, வழக்கு நடத்த வேண்டும்.
தங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படாவிட்டால், வழக்கறிஞர் மீது தான் கோபப்படுகின்றனர். வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதற்கு பல்வேறு பின்னணிகள் கூறப்படுகின்றன.
ஆனால், ரவுடிகள் பெரிய அளவில் தலையெடுத்து இருப்பதை தான் இந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், பழைய ஜோத்பூரில் ஜுக்ராஜ் சவுகான், 48, என்ற வழக்கறிஞர், சில வாரங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் வழக்கறிஞர்கள், நீதி கேட்டு பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தலில், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கொண்டு வந்துள்ளார். அதன்படி வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டால், பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளை வைத்து வழக்கு பதிவு செய்தால், தண்டனை கடுமையாக இருக்கும்.
அதோடு, பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினருக்கு, அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை, தமிழக அரசு, நடப்பு சட்டசபை கூட்ட தொடரில் கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே விஷயத்தை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் வலியுறுத்தியுள்ளார்.
-- நமது நிருபர் --