வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராகுலை சந்திக்க, முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்லாமல் தவிர்த்ததற்கு, உதயநிதி -- கார்த்தி சிதம்பரம் இடையிலான மோதலே காரணம் என கூறப்படுகிறது.
ராகுல் பதவி இழப்பு விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, டில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டது. அவரும் டில்லி செல்ல தயாராக இருந்தார்.
ஆனால், புதுக்கோட்டையில் காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அளித்த பேட்டியில், அமைச்சர் உதயநிதியை குறை கூறினார். 'நீட் தேர்வு விலக்கு தொடர்பாக, அமைச்சர் உதயநிதி சொன்னதை பற்றி எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்' என, கோபமாக கூறினார்.
இது உதயநிதி தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதை உணர்த்தும் விதமாக, சமூக வலைதளங்களில், உதயநிதி தரப்பினர் வெளியிட்டுள்ள பதிவுகள்:

* நீட் தேர்வு ரத்து பற்றி, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றதால் தான், கார்த்தி சிதம்பரமும் வெற்றி பெற்றார்.
* சிவகங்கையில் மீண்டும் கார்த்திக்கு 'சீட்' வழங்க வேண்டும். ஆனால், பா.ஜ.,வை சேர்ந்த எச்.ராஜாவை ஜெயிக்க வைக்க வேண்டும். ஏன்னா, அவரை விட இவர் நல்லவர்.
* கண்டிப்பாக, கார்த்திக்கு சீட் கொடுக்கக் கூடாது. ஒரு பலமான தி.மு.க., வேட்பாளரை நிறுத்த வேண்டும்.
* லோக்சபா தேர்தலில் கார்த்திக்கிற்கு சீட் இல்லை என்பதை உறுதி செய்த பின் தான், காங்கிரசுடனான கூட்டணி பேச்சுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தால் தான், ராகுலை சந்திக்கும் திட்டத்தை, ஸ்டாலின் தவிர்த்துள்ளதாக, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதை அறிந்ததும், ராகுலும், கார்த்தி மீது கடும் கோபம் அடைந்துள்ளார். டில்லியில் நேற்று பார்லிமென்ட் காங்., அலுவலகத்திற்கு ராகுல் வந்தார். அப்போது, பார்ர்லிமென்ட் வாசலில் நின்றிருந்த கார்த்தி, அவருக்கு கை கொடுத்து வரவேற்க முயன்றார். ஆனால், ராகுல் அவர் முகத்தை கூட பார்க்காமல் சென்று விட்டார்.
- நமது நிருபர் -