நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா தன் லாக்கரில் இருந்து 3.60 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதாக புகார் அளித்தநிலையில், வீட்டு பணிப்பெண்ணிடம் இருந்து 3 கோடி மதிப்பிலான 100 சவரன் நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், மற்ற நகைகள் குறித்து அப்பெண் மற்றும் கார் ஓட்டுனரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
'லாக்கரில் இருந்து திருடு போன நகைகள் எவ்வளவு, ஏன் குறைத்து மதிப்பிட்டு புகார் அளித்தார்' என, ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் போலீசார் நேற்று, ஈஸ்வரி வீட்டில் இருந்து, 40 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். இந்த நகை, நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் இருந்து திருடப்பட்டதா எனவும் விசாரிக்கின்றனர்.
மனைவியுடன் தகராறில் 'நறுக்'
தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியில் கருப்பசாமி கோயில் தெருவில் வசிப்பவர் சரவணன். இவரது மனைவி நாகராணி 40. மூன்று மகள்கள். ஒரு மகளுக்கு திருமணம் செய்துள்ளனர். மற்றொரு மகள் நர்சிங் படித்து வருகிறார். நாகராணியிடம் பணம் கேட்டு சரவணன் தகராறு செய்துள்ளார். நாகராணி மறுத்துள்ளார். கோபத்தில் கழிப்பறை சென்ற சரவணன் கத்தியால் தனது ஆண் உறுப்பை அறுத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டு சென்று பார்த்த நாகராணி அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தில் உள்ளோர் உதவியுடன், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரவணனை சேர்த்தார். ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
2000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் முத்து 49. கன்னியாகுமரி மாவட்டம் குலசகேரம் அருகே களியல் கிராம நிர்வாக அதிகாரி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த புரோன் என்பவர் மரம் வெட்ட அனுமதி பெற அணுகினார். இதற்காக முத்து லஞ்சம் கேட்டுள்ளார். புரோன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அவர்கள் ஆலோசனை படி நேற்று காலை ரசாயனம் தடவப்பட்ட நான்கு ஐநுாறு ரூபாய் நோட்டுகளை முத்துவிடம் கொடுத்தார். மறைந்திருந்த போலீசார் முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இருவர் கைது
கோவை மாவட்டம், அன்னுார் அருகே கரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60. இவரது மனைவி தங்கமணி, 54. பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த தங்கமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
விசாரணையில் அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வரும் காணியப்பன், 29, என்பவர் தங்கமணியிடம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். திருப்பி செலுத்த முடியாததால், குன்னூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர், 30, என்பவருடன் சேர்ந்து தங்க மணியை கழுத்தை அறுத்து கொலை செய்து தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான தனிப்படையினர் நேற்று மதியம் இருவரையும் மைல்கல் அருகே கைது செய்து அவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். இருவரும் அன்னூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலி வீடியோ பகிர்ந்த நபர் கைது
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல, போலியான வீடியோக்களை பகிர்ந்த,பீஹார் மாநிலத்தை சேர்ந்தவரை, போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.

போலி வீடியோ தயாரிப்பில் ஈடுபட்ட, பீஹார் மாநிலத்தின், 'சச் தக் நியூஸ்' என்ற யூ டியூப் சேனல் நிறுவனர் மோனிஷ் காஷ்யப், 32, என்பவர் மீது, மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை கைது செய்வதற்காக, தமிழக போலீசார் குழு, பீஹார் சென்றது. மோனிஷ் காஷ்யப்பை கைது செய்து, நேற்று, சென்னை அழைத்து வந்தனர்.
தாயின் உடலை 13 ஆண்டுகள் மறைத்து வைத்த மகன் கைது
போலந்தின் ராட்லின் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மரியன். இவரது தாய் 2010ம் ஆண்டு, தன் 95வது வயதில், வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்த சில தினங்களிலேயே, மகன் மரியன், தாயின் உடலை மீண்டும் தோண்டி, வீட்டுக்கு எடுத்து வந்தார். பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி உடல் அழுகாதபடி பதப்படுத்தினார்.
பின், அந்த உடலை சோபாவுக்குள் மறைத்து வைத்தார். இந்த சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் வரை யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அந்த வீட்டில் மரியன் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் மரியன் வீட்டுக்கு வந்த உறவினர், அவரது நடவடிக்கையை கண்டு சந்தேகம் அடைந்தார். வீட்டில் பல இடங்களை அவர் சோதனை செய்தபோது, சோபாவுக்குள் இருந்த உடலை கைப்பற்றினார்.
இந்த உடல், 2009ம் ஆண்டு வெளியான செய்தித் தாள்களில் சுற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து, தாயின் உடலை 13 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகன் மரியனை கைது செய்த போலீசார், அவரை மனநல டாக்டர்களின் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.608 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
பிலிப்பைன்சில் 608 கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 'மெத்தம்பேட்டமைன்' என்ற போதைப் பொருளை, அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவற்றை விற்பனை செய்த சீன நபரையும் கைது செய்தனர்.