வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை, கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்க, 204 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், மூன்றுகட்ட பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு, முதற்கட்ட பணி முடியும் தருவாயில் உள்ளது. இரண்டாம் கட்ட பணி விரைவில் துவக்கப்பட உள்ளது. மூன்றாம் கட்ட பணிக்காக, சில உரிமையாளர்கள் நிலம் வழங்க முன்வராததால், இணைப்புச் சாலை திட்டத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சாலைகளாக பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகள் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் பொழுதுபோக்கு மையங்களும், ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிகமாக உள்ளன.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் செல்வோர், இந்த இரு சாலைகளையும் பயன்படுத்துகின்றனர். மேலும், வேளச்சேரி- - தாம்பரம் சாலை மற்றும் பல்லாவரம் - -துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவை, இந்த சாலைகளின் இணைப்பாக உள்ளன.
ரேடியல் சாலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் சந்திப்பில் இருந்து, கே.கே.சாலை வழியாக, செல்ல வேண்டும். அல்லது, தரமணி 'சிக்னல்' திருவான்மியூர் வழியாகச் செல்ல வேண்டும்.
ஓ.எம்.ஆரில், தரமணி சிக்னலில் இருந்து சோழிங்கநல்லுார் சந்திப்புக்கு, 12 கி.மீ., துாரம் உள்ளது. இந்த இடைப்பட்ட இடத்தில், துரிதமாக கிழக்கு கடற்கரை சாலைக்குச் செல்ல இணைப்புச் சாலை இல்லை. இதனால், ஓ.எம்.ஆரில் வாகன நெரிசல் அதிகரிக்கிறது.
இதையடுத்து, ரேடியல் சாலையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலைக்கு துரிதமாக செல்லும் வகையில், ரேடியல் சாலையை கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்க, 2008ம் ஆண்டு, சி.எம்.டி.ஏ., 'மாஸ்டர் பிளானில்' திட்டமிடப்பட்டது. இத்திட்டம், கடந்த 2018ல் செயல் வடிவம் பெற்றது.
துரைப்பாக்கம் 'சிக்னலுடன்' முடியும் ரேடியல் சாலை, 10.6 கி.மீ., துாரம் உடையது. இதில் இருந்து நேராக, 1.4 கி.மீ., துாரத்தில், 100 அடி அகலத்தில் புதிய சாலை அமைத்து, கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரையில் இணைக்க திட்டமிடப்பட்டது.

துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் கரை சாலை, பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் மற்றும் அங்கிருந்து நீலாங்கரை வரை சாலை என, மூன்று கட்டமாக பணி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மொத்தம், 204 கோடி ரூபாயில், 4,600 அடி நீளத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, துரைப்பாக்கத்தில் இருந்து, பகிங்ஹாம் கால்வாய் கரை வரை, 2,300 அடி நீளம், 100 அடி அகலத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்து, 330 அடி நீளத்தில், பகிங்ஹாம் கால்வாயில் மேம்பால சாலை அமைக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, நீலாங்கரை சி.எல்.ஆர்.ஐ., நகர் வழியாக, 1,970 அடி சாலை அமைத்து, இ.சி.ஆருடன் இணைக்க வேண்டும். இதில், முதற்கட்ட பணி, 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இரண்டாம் கட்டமாக மேம்பாலம் அமைக்கும் பணி, மத்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அனுமதிக்காக காத்திருக்கிறது.
மூன்றாம் கட்ட பணிக்கு, நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதில், பலர் நிலம் வழங்க முன்வந்துள்ளனர். சிலர், இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தக் கூடாது என எதிர்க்கின்றனர்.
இதனால், இணைப்பு சாலை பணியை முடிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள், நிலம் உரிமையாளர்களிடம் சுமுகமாக பேசி, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை, இடையூறு இல்லாமல் சாலை அமைக்கப்படுகிறது. பகிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து விடும் திட்டத்தை கணக்கில் கொண்டு, மேம்பாலமாக கட்டப்பட உள்ளது. கால்வாய் கரையில், சில ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை விரைவில் அகற்றி, மேம்பாலம் பணி துவக்கப்படும். அதன் பின், 50க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இழப்பீடு வழங்க தயாராக உள்ளோம். சிலர் வழக்கு தொடுத்ததால், காலதாமதம் ஆகிறது. அவர்களிடம் பேச்சு நடத்தி வருகிறோம்.
- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்
இலகு ரக வாகனங்கள் அனுமதி
துரைப்பாக்கம் சிக்னலில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை பணி முடியும் போது, இலகு ரக வாகனங்கள் செல்ல முடியும். பகிங்ஹாம் கால்வாயில் இருந்து, பாண்டியன் சாலை மற்றும் வைத்தீஸ்வரர் நகர் சாலை வழியாக, 1 கி.மீ., பயணித்து, கிழக்கு கடற்கரை சாலைக்குச் செல்லலாம். மூன்றாம் கட்ட பணி முடிந்தால் தான், இணைப்பு சாலையை முழுமையாக பயன்படுத்த முடியும்.
படகு போக்குவரத்து
பகிங்ஹாம் கால்வாயில் தரைப்பாலம் கட்டி சாலையை இணைக்க, முதலில் திட்டமிடப்பட்டது. வருங்காலத்தில் படகு போக்குவரத்து விடும் சாத்தியக்கூறுகள் உள்ளதால், அதை கருத்தில் கொண்டு, மேம்பாலமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மேம்பாலம் 30 கோடி ரூபாயில், 330 அடி நீளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமான நீர்வழி தடங்களில், 5 அடி உயரத்தில் பாலம் கட்டப்படும். இங்கு, 15 அடி உயரத்தில் மேம்பாலமாக கட்டப்பட உள்ளது.
ஐ.ஐ.டி., பரிந்துரை
துரைப்பாக்கம் முதல் பகிங்ஹாம் கால்வாய் வரை, வயல் வெளியாக இருந்ததால், 3.5 அடி தடிமனில், 5 அடுக்கு களிமண் கலக்காத மண் கொட்டி சமப்படுத்தப்படுகிறது.
ஐ.ஐ.டி., ஆய்வுக் குழு பரிந்துரைப்படி, கடந்த ஆண்டு, ஜூலை 1 முதல், 193 நாட்கள் மண் பதப்படுத்தப்பட்டது. தற்போது, இரண்டு அடுக்கு ஜல்லி மற்றும் இரண்டு அடுக்கு தார் கலவையில், சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
பெயர் மாறும் ரேடியல் சாலை
தற்போது, துரைப்பாக்கம் சிக்னலுடன் ரேடியல் சாலை முடிவதால், 'பல்லாவரம் - -துரைப்பாக்கம் ரேடியல் சாலை' என்று அழைக்கப்படுகிறது. இணைப்பு சாலை முடிந்ததும், 'பல்லாவரம் - -கிழக்கு கடற்கரை ரேடியல் சாலை' என அழைக்கப்படும்.
இத்துடன், தற்போது 10.6 கி.மீ., உள்ள ரேடியல் சாலை, இணைப்புக்குப் பின், 12 கி.மீ., துாரமாக அதிகரிக்கும்.