வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிந்து, திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், அங்கு, முதுமக்கள் தாழிகள் இருப்பதாக, மத்திய தொல்லியல் துறை, 10.38 ஏக்கர் நிலத்தை அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் அகழாய்வு செய்ய வாய்ப்பு இருப்பதால், இப்பகுதியை ஒட்டி கட்டுமான பணிகளுக்கு, மத்திய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.
இந்த நிலத்தை, தங்கள் பெயருக்கு மாற்ற, மத்திய தொல்லியல் துறை, மாவட்ட நிர்வாகத்துக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது.
இந்நிலையில், தொல்லியல் துறையின் புராதன சின்னங்கள் இருக்கும் பகுதியில், 16 கோடி ரூபாய் செலவில் சூழலியல் பூங்கா மற்றும் அறிவு சார் மையம் அமைக்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அறிவித்தது.
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, கலந்தாலோசகர் தேர்வு நடந்து வருகிறது. இத்திட்டத்துக்கு மத்திய தொல்லியல் துறையின் தடையின்மை சான்று கேட்டு சி.எம்.டி.ஏ., விண்ணப்பித்தது.
இதற்கு ஒப்புதல் அளித்து, மத்திய தொல்லியல் துறையின் புராதன சின்னங்கள் பிரிவு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

தேசிய புராதன சின்னங்கள் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.
இப்பணிகளை துவக்கும் முன், மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்ட அலுவலகத்துடன் இணைந்து, இதற்கான பகுதியை தனியாக பிரித்து காட்டும் வகையில், வேலி அல்லது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட வரைபடத்தை மீறி, எவ்வித புதிய பணிகளும் நடக்கக் கூடாது. முதுமக்கள் தாழிகள் உள்ள பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள, எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், அந்த பகுதிகளை சுட்டிக்காட்டும் அறிவிப்பு பலகைகள் இருக்க வேண்டும். அறிவு சார் மையம், தடை செய்யப்பட்ட இடத்தில் கட்டக் கூடாது.
இதில், ஒவ்வொரு பணியும் தொல்லியல் துறையின் சென்னை வட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் தான் நடக்க வேண்டும் என்பன உட்பட, 20 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புராதன சின்னத்தில் பூங்கா தேவையா?
இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பேருந்து நிலையம் அமைப்பது, அது சார்ந்த பணிகளை சி.எம்.டி.ஏ., மேற்கொள்ளலாம். ஆனால், இதை அடிப்படையாக வைத்து தடை செய்யப்பட்ட இடத்தில் பூங்கா, அறிவு சார் மையம் அமைக்க வேண்டிய தேவை என்ன?
வரலாற்று சான்றுகளை உறுதிபடுத்த குறிப்பிட்ட சில இடங்கள் எதிர்கால அகழாய்வுக்காக தனித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இங்கு பூங்கா அமைக்கும் திட்டத்தை சி.எம்.டி.ஏ., கைவிட வேண்டும். தொல்லியல் ஆய்வு முக்கியத்துவத்தை உணர்த்து, இதற்கான அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.