திருச்சி: முதல்வரின் காலை உணவு திட்டத்துக்கான சமையல் கூடம் கட்டும் தீர்மானத்துக்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் சேர்ந்து, தி.மு.க., மற்றும் காங்., கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி கவுன்சில் கூட்டம், நேற்று முன்தினம், தலைவர் மைக்கேல் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு, நகராட்சி பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் கட்டுவதற்கு, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அதற்கு அனுமதி கோரப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களோடு சேர்ந்து, மணப்பாறை நகர தி.மு.க., செயலரும், கவுன்சிலருமான செல்வம், தி.மு.க., கவுன்சிலர்கள் நிர்மலா, ஜான் பிரிட்டோ, காங்., கவுன்சிலர் செல்வா ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அந்த தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு, தலைவர் மற்றும் நகராட்சி கமிஷனருக்கும் கடிதம் அளித்துள்ளனர். தலைவர் மீதான அதிருப்தியில் இவ்வாறு, தி.மு.க., கவுன்சிலர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. அதுபோல, தி.மு.க., மற்றும் காங்., கட்சியைச் சேர்ந்த இந்த நான்கு கவுன்சிலர்கள் தான், முறைகேடாக நடந்ததாக கூறி டூ - வீலர் மறு ஏல அறிவிப்பை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், நகராட்சி தலைவருக்கு எதிராகவும், அ.தி.மு.க., கவுன்சிலர்களுடன் சேர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் மணப்பாறை நகராட்சி கவுன்சிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.