வேலுார்: தமிழகம் முழுவதும், அரசு கூர்நோக்கு இல்லங்களிலுள்ள சிறுவர்கள், தப்பி செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
வேலுார், காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின், அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து கடந்த 27 இரவில் ஆறு சிறுவர்கள் தப்பியோடினர். இது குறித்து, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையிலான ஆலோசனை கூட்டம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் எட்டு கூர்நோக்கு இல்லம், 36 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளன. மேலும், அரசு கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு இல்லங்கள் செயல்படுத்தப்படும். தப்பியவர்கள் விரைவில் பிடிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.