சென்னை: பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ், 22 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 123 ஏரிகள் புனரமைக்கப்படும்,'' என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: கடலுார், திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகள், 58.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
அரியலுார், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 17 அணைகளின் பழைய இரும்பு கதவுகள், மின்தொடர்பு சாதனங்கள், 34.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
கோவை, திண்டுக்கல், பெரம்பலுார், சேலம், திருச்சி, திருப்பத்துார், திருவண்ணாமலை, வேலுார் ஆகிய மாவட்டங்களில், 15 இடங்களில் புதிய தடுப்பணைகள், 70.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
பிரதமரின் வேளாண் நீர் பாசன திட்டத்தின் கீழ், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கடலுார் உள்ளிட்ட 22 மாவட்டங்களில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 123 ஏரிகள் புனரமைக்கப்படும்.
அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்தில் கிடைக்கும் உபரி நீரை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார், ஒட்டன்சத்திரம், வேடசந்துார், திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் உள்ள குளங்களுக்கு கொண்டு செல்வதற்கு சாத்திகூறு அறிக்கை, ஒரு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.
கன்னியாகுமரி, தோவாளை அடுத்த ஞாலத்தில், தடவையாற்றின் குறுக்கே நீர்தேக்கம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை, மூன்று கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு பொய்கை நல்லுார், தஞ்சாவூர் மாவட்டம், சோமநாதபட்டினம் ஆகிய இடங்களில் கடல் நீர் ஊடுருவதை தடுக்கும் வகையிலான கடைமடை கட்டமைப்புகள், 13.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கோவை மற்றும் வேலுார் மாவட்டங்களில், நான்கு இடங்களில் சிறிய ஆறுகளின் குறுக்கே, பாலங்கள், தரைப்பாலங்கள், கரைகளில் சாலை, நடைபாதை அமைக்கும் பணிகள், 49.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், மூன்று புதிய கால்வாய்கள் அமைக்கும் பணிகள், 12.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அமைச்சர் அறிவித்தார்.