சென்னை: பா.ம.க.,வை சேர்ந்த சதாசிவம், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மேட்டூர் அணையில் கிடைக்கும் கெண்டை மீன்கள், அதிக ருசி கொண்டவை. தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடப்பதால், எம்.எல்.ஏ., சதாசிவம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு, மீன் விருந்து வைக்க முடிவு செய்தார்.
அதற்காக, மேட்டூர் அணையில் பிடிக்கப்பட்ட, 1 டன் கெண்டை மீன்களையும், காவிரி நீரில் விளைந்த அரிசியையும், மேட்டூரில் இருந்து எடுத்து வந்தார். சமையலர்களையும் அங்கிருந்து அழைத்து வந்தார்.
அவர்கள், சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள சமூக நலக் கூடத்தில், சமையல் பணியில் ஈடுபட்டனர். மீன் குழம்பு, மீன் வறுவல், சாதம், ரசம், முட்டை என, உணவு தயார் செய்யப்பட்டது.
அவை, உரிய டப்பாக்களில் அடைக்கப்பட்டு, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் இருந்த இடத்திற்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு அவர், ஐந்து லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், 2006 - 2011 தி.மு.க., ஆட்சியின்போது, மேட்டூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மீன் உணவு வழங்கினார். அதேபோல், நேற்று பா.ம.க.எம்.எல்.ஏ., சதாசிவம், அனைவருக்கும் மீன் உணவு வழங்கி அசத்தி உள்ளார்.