சென்னை: புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழந்தால், அவர்களதுஉடலை விமானத்தில் சொந்த ஊர் எடுத்து செல்வதற்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்,'' என, தொழி லாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் கூறினார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, மூக்கு கண்ணாடி வாங்க வழங்கப்படும் ஊக்கத்தொகை 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக அதிகரிக்கப்படும். தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள், தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 25 ஆயிரம் ரூபாய், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேரும்போது, கல்வி கட்டணம், விடுதி கட்டணம் மட்டுமின்றி, ஆண்டு செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரிய தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால், உதவித்தொகை 1.25 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
புலம்பெயர் கட்டுமானதொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியிடத்தில் விபத்தில் உயிரிழந்தால், அவர்களது உடலை சொந்த ஊர்களுக்கு விமானத்தில் எடுத்து செல்ல, ஒரு லட்சம் ரூபாய், மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்படும்
கட்டுமான தொழிலாளர்கள் இதய அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா,சிலிக்கோசிஸ், பக்கவாதம் ஆகியவற்றால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால், உதவித் தொகையாக ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
தானியங்கி மோட்டார்வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால், அவர்களது குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்
சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் மயக்க மருந்தியல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம்,குழந்தை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு பிறகான இரண்டாண்டு பட்டயப்படிப்புகள், 1.23 கோடி ரூபாய் செலவில் துவங்கப்படும். இவ்வாறு கூறினார்.