சேலம்: சாரதா கல்லுாரி சாலையில் இரு இடங்களில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணி நடந்ததால், போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டு வாகன ஓட்டிகள்
அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாநகராட்சி பகுதிக்கு, மேட்டூரில் இருந்து குடிநீர் வரும் பிரதான குழாயில் நேற்று முன்தினம் காலை, அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தன. இதையடுத்து பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மாலை, அப்பணி இறுதிக்கட்டத்தை எட்டியது. அப்போது அழகாபுரம் பஸ் ஸ்டாப் அருகே மேலும் ஒரு இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரு இடங்களில் ஏற்பட்ட உடைப்பையும் சரிசெய்யும் பணி நடந்தது. இதற்காக, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. குறிப்பாக, அழகாபுரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, 5 ரோடு போக, ஒரே வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் நெரிசலில் ஊர்ந்து சென்றபடி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
குடிநீர் குழாய் சீரமைப்பு பணி மந்தகதியில் நடந்ததால், நேற்று இரவு வரை சாரதா கல்லுாரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.- -